உணவுப் பொருட்களின் பொதிகள் மற்றும் விளம்பரங்களில் தவறான கூற்றுகள் இடம்பெற்றதாக நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்துஸ்தான் யுனிலீவரின் ஹார்லிக்ஸ் மகளிர் ஊட்டச்சத்து பானத்தில் எலும்பு வலிமை, எலும்பு ஆரோக்கியம், சர்க்கரை சேர்க்கப்படவில்லை உள்ளிட்ட கூற்றுகள் தவறானவை அல்லது விதிகளுக்கு முரணானவை என ஆணையம் தெரிவித்துள்ளது.
தாய்மார்களுக்கான ஹார்லிக்ஸ் பானத்தில் குழந்தையின் ஆரோக்கியமான பிறப்பு எடை தொடர்பான கூற்றுகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன.
நெஸ்கஃபே தயார்நிலை பானங்களின் பாக்கெட்டுகளில் முன்புறம் ‘சுவையூட்டப்பட்ட பால்’ என்றும் பின்புறம் ‘பால் சார்ந்த பானம்’ என்றும் முரண்பட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இணையவழி விற்பனைத் தளங்களிலும் தயாரிப்புகளின் வகை, கலவை தொடர்பான கூற்றுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், சிறுநீரக நோயாளிகளின் உணவு மேலாண்மைக்கான நெஸ்லே ரிசோர்ஸ் ரீனல் வெனிலா ஊட்டச்சத்துப் பொடிக்கு தேவையான முன்அனுமதி பெறப்படவில்லை என ஆணையம் கூறியுள்ளது.
இந்த விவகாரங்களில் குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்கமளிக்க நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நெஸ்கஃபே பானங்களைத் தயாரிக்கும் ஷ்ரைபர் டைனமிக்ஸ் டெய்ரீஸ், லோட்டஸ் டெய்ரி நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமம் வழங்கும் அதிகாரிகளும் இணையவழி விற்பனைத் தளங்களும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தயாரிப்புகளைத் தனியுரிம உணவாக வகைப்படுத்தியதும் தவறானது எனக் கூறி விளக்கம் கோரியுள்ளது.